Wednesday, August 26, 2015

தாய்மார்களே மார்க்கத்தை கற்க வெட்கப்படாதீர்கள் !


பெண்களில் சிறந்தவர்கள் அன்ஸாரி (மதீனாவாசிகளான) பெண்கள். அவர்கள் மார்க்கத்தை விளங்கிக்கொள்வதற்கு வெட்கப்பட்டதே கிடையாது” என ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

​அன்றைய பெண்கள், மார்க்கத்தைத் தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அதை விளங்குவதற்கு முயற்சித்தார்கள். நாம் செய்யும் கடமைகளில் அமல்களில் ஏதும் தவறுகள் ஏற்பட்டுவிடுமோ எனப்பயந்து சொல்வதற்கு வெட்கப்படும் விடயங்களிலும் கூட மார்க்கம் என்ற ஒரே காரணத்தால் வெட்கத்தை ஒரு புறம் தள்ளி விட்டு மார்க்கச் சட்டங்களை விளங்கிக் கொள்வதற்கு முனைந்தார்கள். அன்ஸாரிய ஸஹாபிப் பெண்மணிகள் வாழ்க்கை வரலாற்றை தெளிவுபடுத்துவதற்கு இரு சம்பவங்களை முன் வைக்கின்றேன்.​


அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வருகை தந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹுதஆலா உண்மையைக் கூறுவதற்கு வெட்கிக்கமாட்டான் எனச் சொல்லிவிட்டு ஒரு பெண் கனவில் இஸ்கலிதமாகுவதைக் கண்டால் அவளுக்குக் குளிப்புக் கடமையா? எனக் கேட்டார்கள். அதற்கு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் (விழித்தபின்) தண்ணீரைக் கண்டால் குளிப்புக் கடமை எனப் பதிலளித்தார்கள். இதைக்கேட்ட உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் (வெட்கத்தால்) முகத்தை மூடிக் கொண்டார்கள். பெண்களுக்கும் இப்படி ஏற்படுமா என உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்டபோது, ஆம். என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறிவிட்டு இல்லாவிடின், ஒரு பிள்ளை எப்படி தனது தாயைப் போல இருக்கிறது? எனச் சொன்னார்கள். (புகாரி, முஸ்லிம்)


இதே கேள்வியை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் கவ்லா பின்து ஹகீம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் ஸஹ்லா பின்து ஹுஹைல் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் புஸ்ரா பின்து ஸப்வான் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் கேட்டிருக்கிறார்கள். இதைப்போலவே கஸ்அம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் எனது தந்தைக்கு ஹஜ் கடமையாகியிருக்கிறது ஆனால் அவர் வயது முதிந்தவராகவும் வாகனத்தில் உட்கார முடியாதவராகவும் இருக்கிறார். அவருக்காக நான் ஹஜ் செய்யவா எனக்கேட்டபோது, ஆம்! ஹஜ் செய்யுங்கள் என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

அன்றைய நம் ஸஹாபா பெண்மணிகள் மார்க்கத்தை விளங்கி கொள்ளுவதற்கு மிக பிரயத்தனம் செய்தார்கள். அதனாலேயே இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் அந்த தாய்மார்கள் மாணிக்கம் போன்று மின்னி பிரகாசித்தார்கள். ஆனால் இன்றோ நம் பெண்களின் நிலையை நினைத்தால் உள்ளம் குமுறுகிறது. சினிமாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவங்கள் மார்க்க கல்விக்கு கொடுப்பதில்லை. சினிமா நடிக, நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை அலசி ஆராயும் இவர்கள் நம் முன்னோர்களான மார்க்க பெரியார்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்க முயற்சிப்பதில்லை. காலையில் இருந்து மாலை வரை தொலைக்காட்சி முன் இருந்து நாடகங்களை பார்ப்பதிலேயே தான் வாழ் நாளை கழிக்கிறார்கள். பரிதாபம் என்ன வென்றால் இவர்களிடம் மார்க்கத்தை கற்க இருக்கும் பிள்ளைகளின் நிலை எப்படி இருக்கும். அவர்களும் வீணாய் போய் தான் பிள்ளைகளையும் வீணாக்கி விடுகிறார்கள்.

மார்க்கத்தை கற்க வயதெல்லை தேவை இல்லை. காரணம் மார்க்கத்தை முழுமையாக நாம் கற்று கொண்டு இருக்கிறோமா, நம்மிடம் மார்க்க அறிவின் நிலை எப்படி இருக்கிறது என்று ஒவ்வொருவரும் சிந்திப்போமானால் இன்றும் நாம் கன்று குட்டிகள் தான் என்று விளங்கும். எனவே வெட்கப்படாமல் பெருமை கொள்ளாமல் மார்க்கத்தை சிறந்த முறையில் நாமும் கற்று நமது பிள்ளைகளையும் ஒழுக்க சீலர்களாக வளர்ப்போமாக.

வெட்கப்படுபவனும், பெருமை கொள்பவனும் ஒருபோதும் கல்வியை கற்றுக் கொள்ள மாட்டான்!  (ஹதீஸ்)

No comments:

Post a Comment